கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி துணை அதிபர் சொலோஸ் சிலிமா பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் துணை அதிபர் உள்பட விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துணை அதிபர் சொலோஸ் சிலிமா உடல் அவரது சொந்த கிராமமான சைப்-க்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அந்நாட்டு தலைநகர் லிலோங்-இல் இருந்து இந்த கிராமம் 180 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் வைத்தே அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் இறுதி சடங்கு காரணமாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், துணை அதிபர் உடலை கொண்டு செல்லும் போது அவரது கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கான்வாயில் ராணுவம், காவல் துறை மற்றும் இதர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
துணை அதிபரின் சவப்பெட்டியை காண ஏராளமானோர் வீதிகளில் திரண்டு வந்திருந்தனர். சில பகுதிகளில் மக்கள் சாலையில் வழிமறித்து, கான்வாயை நிறுத்தி சவப்பெட்டியை பார்த்தால் தான் வழிவிடுவோம் என்று கோரிக்கை விடுத்தனர். சில பகுதிகளில் இதுபோன்ற சம்வங்கள் அரங்கேறிய நிலையில், கான்வாய் வாகனம் வழியில் காத்திருந்தவர்கள் மீது மோதியது.
வாகனம் மோதியதில் 2 பெண், 2 ஆண் உள்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.