கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 பேரைக் உடனடியாக கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
சட்டத்தரணி சேனக பெரேரா 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, மொறட்டுவை நகர சபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆகியோரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரியே இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.