மாணவர்களின் ஜனநாயக உரிமையின் மீது மேற்கொள்ளப்பட்ட மீறல்!

You are currently viewing மாணவர்களின் ஜனநாயக உரிமையின் மீது மேற்கொள்ளப்பட்ட மீறல்!

அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை போராட்டம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகள் காலங்காலமாக அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களினால் தமது கால்நடைகளை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

அண்மைய வருடங்களில், இந்தப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் சட்ட விரோதமான முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் குடியேற்றங்களின் காரணமாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசங்களை தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் பயன்படுத்துவது தடைப்பட்டிருக்கிறது.

மேய்ச்சல் தரையினை பயன்படுத்தும் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன‌. அத்துடன் மேய்ச்சலுக்கு விடப்பட்ட அவர்களது கால்நடைகளின் மீதும் வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரை மீது இதுவரை இருந்த உரித்து அகற்றப்பட்டமை அவர்களின் பொருளதாரத்தின் மீதும், வாழ்வாதாரத்தின் மீதும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் இந்தப் பகுதியில் ஒரு புத்தர் சிலையும் நாட்டப்பட்டது. இந்த உரிமை மீறல் தொடர்பிலே பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களது ஆதரவாளர்களும் பல மாதங்களாக அமைதி வழியிலே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அத்துமீறல் செயன்முறையினையும், வன்முறையினையும் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினையும் கிழக்கு பல்கலைக்கழகத்தினையும் சேர்ந்த தமிழ் மாணவர்கள் இந்தப் பிரதேசத்தில் ஓர் அமைதிப் போராட்டத்தில் கடந்த 5ஆம் திகதி ஈடுபட்டனர்.

சட்ட விரோதமாக ஒன்றுகூடினர் என்ற தோரணையிலே, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பலர் சந்திவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தமையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர்களின் ஜனநாயக உரிமையின் மீது மேற்கொள்ளப்பட்ட மீறலாகவே இந்தக் கைதுகளை நாம் பார்க்கிறோம். வடக்கு, கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மக்களையும் மாணவர்களையும் கைது செய்யும் போக்கு தொடர்வதை நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பினை நாட்டின் வடக்கு, கிழக்கிலே பல தசாப்தங்களாக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் சிங்கள பௌத்தமயமாக்கலின் ஒரு வடிவமாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகிறது.

வடக்கு, கிழக்கு பகுதிகளிலே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார இருப்புக்கு இந்த ஆதிக்கம் மிக்க சிங்கள பௌத்தமயமாக்கல் செயன்முறை ஓர் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இராணுவத்தின் உதவியுடனும், தீவிரத்தன்மை மிக்க பௌத்த மத குருக்களின் ஆதரவுடனும், இனவாதத்தினைக் கையில் எடுத்துள்ள சிங்கள‌ அரசியல்வாதிகளின் அனுசரணையுடனும் இந்தச் செயன்முறை வடக்கு, கிழக்கிலே தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக இனங்களுக்கு இடையிலே பதற்றமும் வெறுப்புமே உருவாகி வருகிறது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்திலே ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கைதினை கண்டிக்கும் அதேவேளை, தமது உரிமைகளுக்காக போராடும் கால்நடை வளர்ப்பாளர்களின் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வெளியிடுகிறது.

இந்தப் பிரதேசத்தில் சட்ட விரோதமாகக் குடியேற்றப்பட்டவர்கள் அகற்றப்பட்டு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இந்த மேய்ச்சல் தரை மீது இருக்கும் உரித்து உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அரசினை எமது ஆசிரியர் சங்கம் கோருகிறது.

மயிலத்தமடு, மாதவனை உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கிலே இடம்பெறும் அனைத்து சிங்கள பௌத்தமயமாக்கல் செயன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு அவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.

இந்த ஜனநாயக மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி, நாம் நாட்டின் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இன, மத, பிராந்திய பேதமின்றி ஒன்றுபடும்படி கோருகிறோம் – என்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply