வட நோர்வேயின் பனிப்பிரதேசமான “Finnmark” மாகாணத்தின் “Kautokeino” மற்றும் “Karasjok” ஆகிய இடங்களில் வெட்டவெளி பனிப்பிரதேசங்களில் இருக்கும் கலைமான்களுக்கு உலங்கு வானூர்திகள் மூலம் உணவளிக்கப்பட்டு வருவதாக, மேற்படி கலைமான்களின் வளர்ப்பை ஊக்குவிக்கும் வட நோர்வே அரச அலுவலகத்தின் இயக்குனர் “Sunna Marie Pentha” தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக பொருளாதார வருமானத்தைத்தரும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போலவே, வட நோர்வேயின் பனிப்பிரதேசங்களில் வாழும் கலைமான்களின் வளர்ப்பும் நோர்வே அரசினால் ஊக்குவிக்கப்படுகிறது. இம்மான்களின் இறைச்சி மிகவும் சுவையானதாகவும் அதேவேளையில் விலையுயர்ந்ததாகவும் இருப்பதோடு, இம்மான்களின் கொம்புகள், தோல்கள் என்பனவும் பிரசித்தமான விலையுயர்ந்த பொருட்களாகும். இம்மான்களின் தோல், கடும்குளிரை தாங்கும்வண்ணம் இருப்பதால், வட நோர்வேயில் வசிக்கும் “சாமி /Samer” இனத்தவர்கள் இதனை ஆடைகள் வடிவமைப்புக்காகவும், பாதணிகள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். கலைமான்களின் தோலினால் செய்யப்பட்ட பாவனைப்பொருட்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வட நோர்வேயில், இக்கலைமான்கள் வசிக்கும் பனிசூழ்ந்த வெட்டவெளிப்பிரதேசங்களில் இறுகிப்போயிருக்கும் பனியினால் தமக்கான உணவை இயற்கை வழியில் தேடிக்கொள்வதில் இம்மான்களுக்கு சிரமமாகவுள்ளதால், உணவில்லாமல் பெருந்தொகையான மான்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள மான்களுக்கான உணவை உலங்கு வானூர்திகள் மூலமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட நோர்வேயின் “Finmark” பகுதியில் மாத்திரம் சுமார் 1.48.000 கலைமான்கள் இருப்பதாகவும், மேய்ச்சலுக்காக வெட்டவெளி பனிப்பிரதேசத்துக்கு செல்லும் இக்கலைமான்கள், கடுமையான பனியின் காரணமாக திரும்பவும் தமது வளர்ப்பாளர்களிடம் திரும்பிவர முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கலைமான்களின் பட்டினிச்சாவை தடுக்குமுகமாக உலங்கு வானூர்தி மூலமான உணவு வழங்கலை மேற்கொள்ள ஆவன செய்யப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளையடுத்து, இராணுவத்தினதும், செஞ்சிலுவைச்சங்கத்தினதும் அனுசரணையோடு, உலங்கு வானூர்திகள் தொடர் பிறப்பில் ஈடுபட்டு, கலைமான்களுக்கான உணவுப்பொதிகளை மான்கள் கூடியிருக்கும் வெட்டவெளி பனிப்பிரதேசத்தில் போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தளத்திலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்கள் தூரம் வரை உணவுப்பொதிகளோடு பறப்பை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் உலங்கு வானூர்தி விமானிகளுக்கு, அப்பகுதியில் இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒவ்வாத காலநிலையும், குறைவான இயற்கை வெளிச்சமும் பெரும் சவாலாக இருப்பதாகவும், நவீன காலத்தில் தாம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய அவசரகால நடவடிக்கை இதுவெனவும் விமானிகள் தெரிவிக்கின்றனர்.
வெட்டவெளி பனிப்பிரதேசத்தில் அகப்பட்டுள்ள கலைமான்களுக்கு சுமார் 250 தொன்கள் உணவு வழங்கவேண்டிய தேவை இருப்பதாகவும், ஒரு தடவையில் 800 கிலோ எடையுள்ள உணவுப்பொதியை மாத்திரம் காவிச்செல்லக்கூடிய உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படுவதாகவும், எப்படியாயினும் மேற்படி அவசர நடவடிக்கையானது பெரும் பொருட்ச்செலவை உண்டாக்கியுள்ளதாகவும், மிகச்சிரமமான பணியாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.