மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 அன்று நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள தமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் தமிழ் தேசிய கொடிகளை கட்டி நினைவேந்தல் வார்த்தை அனுஷ்டிக்க தயாராகிவரும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
முல்லைத்தீவு சந்தை பகுதி மற்றும் கடற்கரை வீதி ஆகிய வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு கொடிகள் கட்டப்பட்டு வர்த்தகர்கள் நினைவு நிகழ்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
வர்த்தக நிலையத்துக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் எமது வர்த்தக நிலையத்தை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள வர்த்தகர்களிடம் குடும்ப விபரம் போன்ற தகவல்களை கேட்டு வினவியுள்ளனர்.
மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தும் எம்மை அச்சுறுத்துவதன் ஊடாக ஏனைய வர்த்தகர்களையும் பயப்பீதிக்குள் வைத்திருப்பதற்கும் அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கும் இவ்வாறான முறையில் புலனாய்வாளர்கள் செயற்படுகின்றனர்.
இருந்தபோதிலும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது நாம் எமது உறவுகளுக்கு நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவோம் எனவும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.