“கொரோனா” வைரஸ் ஐரோப்பாவை கடுமையாக தாக்கியதன் விளைவாக, பெரும்பாலான நாடுகள் முடக்கநிலையை அடைந்திருப்பதால், வருமானமில்லாமல் பல்லாயிரக்கணக்கான வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்றவையும் முடங்கிப்போயுள்ள நிலையில், முற்றாக தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ள சுவீடன் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் கப்பலொன்று மிதக்கும் வைத்தியசாலையாக மீளுருவாக்கம் செய்யப்பட இருப்பதாக சம்பந்தப்பட்ட சுவீடன் நிறுவனம் அறிவித்துள்ளது.
1979 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிற்கும், டென்மார்க்கின் கரையோர நகரமான “Fredrikshavn” இற்குமிடையிலான பயணிகள் மற்றும் வாகனப்போக்குவரத்துக்களை நடத்திவந்த சுவீடனை சேர்ந்த “Stena Line Cruises” நிறுவனத்துக்கு சொந்தமான “Stena Saga” என்ற கப்பல், “கொரோனா” பரவல் கொடுத்த எதிர்விளைவுகளினால், வருமானமேதுமில்லாமல் நிரந்தரமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுவீடன் துறைமுகமொன்றில் தரித்து வைக்கப்பட்டுள்ள மேற்படி கப்பலை 520 படுக்கைகள் கொண்ட மிதக்கும் வைத்தியசாலையாக மீளுருவாக்கம் செய்து, “கொரோனா” நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மிதக்கும் வைத்தியசாலையாக மாற்றுவதற்கான பூர்வாங்க திட்டங்களை பூர்த்தி செய்துள்ள மேற்படி “Stena Line Cruises” நிறுவனம், இது தொடர்பில் நோர்வே, சுவீடன், டென்மார்க் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும், பேச்சுவார்த்தைகள் பயனளிக்கும் பட்சத்தில் சில வாரங்களிலேயே மேற்படி கப்பல் மிதக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுவிடுமெனவும் தெரிவித்துள்ளது.
எனினும், “கொரோனா” நோயாளிகளுக்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கான வசதிகளெதுவும் இக்கப்பலில் இருக்காதென தெரிவித்திருக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் “Per Westling”, “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்ட நிலையில் சாதாரண வைத்திய முறைமையை எதிர்கொண்டுள்ள நோயாளிகளையும், அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைகளை பெற்றபின்னர் வைத்திய கண்காணிப்பு தேவைப்படுபவர்களையும் பராமரிக்கக்கூடிய முறையில் இக்கப்பல் வடிவமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய நாடான “Greece / கிரீஸ்” இல், சுமார் 3000 சிரிய நாட்டு ஏதிலிகள் தங்கியுள்ள முகாமில் “கொரோனா” பரவல் அவதானிக்கப்பட்டுள்ளதால், அங்கிருக்கும் சிறு குழந்தைகளை நோர்வேக்கு கொண்டுவந்து, செயற்படாமால் தரித்து வைக்கப்பட்டிருக்கும் மேற்குறிப்பிட்ட “Stena Saga” பயணிகள் கப்பலில் வைத்து பராமரிப்பதற்கு நோர்வே ஆவன செய்யவேண்டுமென, நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையாரிடம் சில தன்னார்வ வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், மேற்படி கப்பல் நிறுவனம் தமது கப்பல் தொடர்பாக இம்மாறுபட்ட முடிவை எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்திகள்: