வெளிநாடுகளுக்கு மின்சக்தியை ஏற்றுமதி செய்ததில், 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 45 பில்லியன் நோர்வே குறோணர்களை நோர்வே சம்பாதித்துள்ளது.
உயர்ந்திருக்கும் எரிவாயு, மற்றும் பெற்றோலிய பொருட்களின் விலை காரணமாக, நீர்மின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நோர்வேயிடமிருந்து மின்சக்தியை, ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் கொள்வனவு செய்வதால் 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் நோர்வேயின் மின்சக்தி விற்பனை வருமானம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் காட்டுகின்றன.
சுவீடன், பிரித்தானியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், நோர்வேயிடமிருந்து அதிகளவு மின்சக்தியை வாங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கின்ற அதே சமயம், அதிகளவான மின்சக்தி ஏற்றுமதியில் காரணமாக, நோர்வேயில் உள்ளூரில் மின்சக்தியின் விலை விண்ணை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உள்ளூரில் அதிகரித்துள்ள மின்சக்தி விலைகளை கட்டுப்படுத்தாமல் நோர்வே அரசு வருமானத்தில் மாத்திரம் குறியாக இருப்பதாக, அரசுக்கெதிராக மக்கள் கருத்துரைக்க ஆரம்பித்திருப்பதும், இது விடயத்தில் ஆளும் கூட்டணி அரசு மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.