உலகப்புகழ் பெற்ற “ஆப்பிள்” நிறுவனம், மின்சக்தியில் இயங்கும் வாகனத்தை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக “Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் புகழ் பெற்ற கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் “ஆப்பிள்” நிறுவனம், 2014 ஆம் ஆண்டிலிருந்து, மின்சக்தியில் இயங்கும் வாகனமொன்றை தயாரிப்பதில் மிக இரகசியமாக ஈடுபட்டு வந்திருந்தது.
“Project Titan” என்னும் சங்கேத பெயருடன் இம்முயற்சியில் ஈடுபட்டுவரும் “ஆப்பிள்” நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் மின் சக்தியில் இயங்கும் வாகனமொன்றின் மாதிரியையும் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கக்கூடிய “ஆப்பிள்” மின் சக்தி வாகனங்களை, 2024 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி செய்வதற்கு மேற்படி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மிக மலிவாக உற்பத்தி செய்யக்கூடிய விதத்திலும், நீண்ட தூரத்துக்கு வாகனம் செல்லக்கூடிய விதத்தில் மின்சக்தியை சேமித்து வைக்கக்கூடியதுமான விதத்தில் புதிய தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப்படும் மின்கலன்களை வாகனங்களில் பயன்படுத்தவும் “ஆப்பிள்” நிறுவனம் முடிவு செய்துள்ளது.