மியன்மார் ராணுவம் பள்ளி ஒன்றின் மீது நடத்திய ஆகாயத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலியானதாக அந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
சம்பவத்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் பிள்ளைகள் என்றும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
மார்ச் மாத நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிப் பொருள்களை அனுப்பச் சண்டைநிறுத்தம் நடப்பில் இருந்தபோதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட பள்ளியை மியன்மாரின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் நடத்தி வந்தது.
எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி அமைந்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அது உள்ளது.
சம்பவத்தை நேரில் கண்ட சிலர், 20 பிள்ளைகளும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏராளமானோர் காயமுற்றதாக தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், இது கட்டுக்கதை என்று ராணுவ அரசாங்கம் கூறியுள்ளது.
பொதுமக்கள் மீது எந்த ஆகாயத் தாக்குதலும் இடம்பெறவில்லை என்று அது சொல்லிற்று.