மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு விலக்கப்பட வேண்டும்!

You are currently viewing மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு விலக்கப்பட வேண்டும்!

மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை ;சிறிலங்கா ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது.

அது குறித்த விபரங்களைத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் மன்னிப்புச்சபை, குறித்த மகஜரில் கையெழுத்திட்டு, ஆதரவை வெளிக்காட்டுமாறு பொதுமக்களிடம் ; கோரிக்கை விடுத்துள்ளது. 


 இது குறித்து மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது: 

 யாழ்.மிருசுவிலில் கடந்த 2000 ஆம் ஆண்டு 5 வயது சிறுவன் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியென நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட  முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க கடந்த மார்ச் மாதம் 26 ஆம்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ;ஷவினால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
 
 இவ்வழக்கில் சுமார் 13 வருடகால விசாரணைகளின் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. எனினும் சுனில் ரத்நாயக்க இதுகுறித்து மேன்முறையீடு செய்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் உயர்நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு உறுதிப்பட்டுத்தப்பட்டது.
 
 எந்தவொரு சட்டத்தின் பிரகாரமும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்ற போதிலும் போர்க்கால படுகொலை குற்றவாளியொருவரை பூரணமாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

சிறிலங்கா ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களையும் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறுவதாக அமைந்துள்ளது.

 எனவே சுனில் ரத்நாயக்கவை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக ; நீக்கிக்கொள்வதுடன் மிருசுவில் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். 

பகிர்ந்துகொள்ள