இலங்கை அரசாங்கம் அதிக எண்ணிக்கையான இராணுவப்பிரிவுகளை உருவாக்கி, அதற்கு அதிகளவில் செலவிடுவதே சீனாவினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகால குத்தகைக்கு பெறமுடிந்தமைக்கான முக்கிய காரணமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் லெய்ன் டன்கன் ஸ்மித் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே லெய்ன் டன்கன் ஸ்மித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘இலங்கையின் துன்பங்களை அனுபவிக்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எனது நண்பர் (எலியற் கோல்பேர்ன்) கூறிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். அதேவேளை இலங்கை அரசாங்கம் அதிக எண்ணிக்கையான இராணுவப் பிரிவுகளை உருவாக்கி, அதற்கு அதிகளவில் செலவிடுவதானது அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகால குத்தகைக்கு சீனாவால் பெறமுடிந்தமைக்கான முக்கிய காரணமாகும்.
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதனால் அத்துறைமுகத்தில் சீனாவினால் அதன் கப்பல்களை நிறுத்திவைக்க முடிகின்றது. இது மேற்கு பிராந்தியம் சார்ந்த பிரிட்டனின் நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என அவர் தனது உரையில் கரிசனை வெளியிட்டுள்ளார்.
அதனை ஆமோதித்துக் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எலியற் கோல்பேர்ன், இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் தொடர்பில் மிகையான கரிசனைகள் காணப்படுவதாகவும், இதுகுறித்து பிரிட்டன் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.