தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கள பேரினவாத அரசின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிங்கள அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (13) நடைபெற்றபோதே அவர் இதைக் கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் ஊடக நிறுவனங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கும் எவ்வித திட்டமும் இல்லை. எனினும், நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்க முடியாது.
இன ஐக்கியத்தில் விரிசலை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகளை போற்றும் வகையிலும் செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படும். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை போன்று சட்டத்தரணிகளை அழைத்து எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கு எதிராகவும் இரகசிய திட்டங்களை தீட்டவில்லை.
நாட்டின் அரசியல் அமைப்பிற்கு அமைவாக சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே எந்தவொரு நிறுவனத்திற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ரம்புக்வெல.
முக்கிய குறிப்பு
சிங்கள் பேரினவாத அரசு நிகழ்த்திய இனப்படுகொலைகள் குறித்து கடந்த காலத்தில் துணிச்சலாக செய்திகளை வெளியிட்டமைக்காக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை எந்தவித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படாத நிலையில், ஈழத்திற்கு வந்தேறிய சிங்கள அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஊடக நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
பேரினவாத சிங்கள அரசாங்கம் தற்போது காட்டாட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில் அதை வெளிப்படுத்தும் ஊடகங்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.