தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக் கலந்துரையாடவுள்ளனர் .
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோரே இவ்வாறு கூடவுள்ளனர்.
இக் கூட்டத்தின் போது, முதலாவதாக, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியான கடிதமொன்று இம்முறையும் அனுப்புவது பற்றி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப வரைவுகள் உள்ள நிலையில் அதனை மேலும் செம்மைப்படுத்தி இறுதி செய்வதற்கு முனைப்புச் செய்யப்படவுள்ளது.
இரண்டாவதாக, இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கடிதம் இறுதி செய்யப்படவுள்ளது.
இந்த கடிதத்தின் வரைவினை சி.வி.விக்னேஸ்வரன் தயாரித்துள்ள நிலையில் அதன் உள்ளடக்கப்பற்றி ஏனைய தலைவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.
இவ்வாறு இறுதி செய்யப்படும் கடிதமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இக் கலந்துரையாடல் நடைபெறும் இடம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ளபோதும் பொதுவானதொரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.