எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக எந்தவித பேச்சும் நடைபெறவில்லை. எல்லாக் கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசுடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை நடைபெறவில்லை.
என்னைப் பொறுத்த வரையிலே மாகாண சபைத் தேர்தலை அரசு தற்போதைக்கு நடத்தாது என்பதே என்னுடைய கருத்து. அரசிடம் பணமில்லை. கருத்துக் கணிப்பு மூலமாக அரசு தனக்குள்ள ஆதரவு குறைந்ததை உணர்ந்துள்ளது.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் பிரச்சினை ஆகிவிடும் என்கின்ற அடிப்படையில் அவர்கள் தேர்தலைத் தள்ளி வைக்கவே விரும்புவார்கள். அரசுக்கு மாகாண சபையைத் தொடர்ந்தும் வைத்திருக்கக் கூடாது என்ற எண்ணமே இருக்கின்றது.
புதிய அரசமைப்பின் மூலம் மாகாண சபை முறைமையை நீக்கி முற்றிலும் சிங்கள பௌத்த அரசமைப்பைக் கொண்டு வருவார்களோ என்பது எனது சந்தேகம். தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசுக்கு நன்மையைத் தராது; தீமையையே தரும் என்ற அடிப்படையிலே மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது என்பதே என்னுடைய கருத்து” – என்றார்.
‘மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்குவீர்களா?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “என்னை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு கட்சிகளின் தலைவர்கள் பலர் சேர்ந்து எத்தனையோ முறை அழைத்ததன் பேரில் தான் இறுதியாக உடன்பட்டேன். இப்போதும் எங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.