திசைகாட்டி / சுயேச்சைகளால் தமிழர் தேசத்திற்கு வரக்கூடிய ஆபத்து…!
தன் தேசத்துக்காகவும், உரிமைக்காகவும் எழுச்சியோடு போராடிய இனம், இனவழிப்பு செய்யப்பட்ட போதும், தேசம் / உரிமைக்கான போராட்டம் ஏதோ ஒரு வடிவில் தக்கவைக்கப்பட்டு, அதன் மூலம் சர்வதேச அரங்கில் தமிழருக்கான தீர்வொன்றை எட்டமுடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழர் அரசியல் நகர்த்தப்பட வேண்டும்…
மேற்சொன்ன எவ்விதமான அரசியல் நகர்வுகளுமில்லாமல் ஆளும் இனவாத தரப்புக்களை சர்வதேச மட்டத்தில் பாதுகாத்து, தமிழருக்கான காத்திரமான விடயங்கள் சர்வதேச அரங்கில் நகர்த்தப்பட வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவற்றை முறியடிக்க இனவாத அரசுகளுக்கு உறுதுணையாக நின்றதோடு, தனது பிராந்திய நலன்களுக்காக தமிழர் அரசியலை தனது ஆளுமைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இந்திய நலன்களை மீறாமலும் காத்த அரசியல்தான் 2009 இலிருந்து இன்றுவரை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பாலும், அதன் கூட்டுக்கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டது…
எனினும், இவற்றுக்கிடையில், தேசத்துக்கான விடுதலைப்போராட்டத்தின் அடிப்படையான தேசவிடுதலை / உரிமை சார்ந்த கருத்தியல் அடிப்படையை இன்றும் கைவிடாமல், அதையே தமிழர் அரசியலின் அடிப்படை கொள்கையாக கொண்ட அரசியல் இயக்கமான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இரண்டே இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தாலும் இயன்ற வரை தமிழர் அரசியல் அடகு வைக்கப்படுவதை தடுத்தே வந்துள்ளதோடு, சந்தர்ப்பங்கள் வாய்த்த போதெல்லாம் எமக்கான பிரச்சனைகளை சர்வதேச சமூகத்தில் முன்னிலைப்படுத்தியும், மக்களின் அன்றாடப்பிரச்சனைகள் உட்பட, நில அபகரிப்பு, வழிபாட்டிட உரிமைகள் மறுப்புக்கெதிராக மக்களோடு களத்தில் நின்று அயராது போராடியும் வருகிறார்கள்…
தமிழர்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்ற கூட்டமைப்பு தமக்கான அரசியலை செய்யவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் மக்களை திசைதிருப்பி, தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தை போலவே தமிழர் தேசத்திலும் மாற்றம் ஏற்படப்போகிறது, அந்த மாற்றத்தால் தமிழர் தாயகத்தில் பாலாறும், தேனாறும் ஓடப்போகிது என்பது போன்ற மாயைக்குள் மக்களை சிக்க வைத்து, இனவாத / மதவாத அடிப்படையே தமது அரசியல் என்று இன்றும் வெளிப்படையாக தன்னை முன்னிறுத்திவரும் JVP / NPP இற்கான வாக்குவேட்டைக்காக சில உதிரிகள் களமிறக்கப்பட்டுள்ளன…
இந்த உதிரிகளின் நீட்சியாகவே சுயேச்சைகளும் நோக்கப்பட வேண்டும்…
ஒருபுறத்தில் ஆதங்கத்திலிருக்கும் மக்களை இனவாத / மதவாத தேசியக்கட்சியின் பின்னால் போகச்செய்வது, இன்னொன்று, சுயேச்சைகள் என்று ஏராளமானவர்களை களமிறக்கி தமிழரின் வாக்குபலத்தை சிதறடித்து, தமிழருக்கான உறுதியான அரசியல் தலைமை ஒன்றை வரவிடாமல் செய்வதே இவற்றின் பின்னணியிலுள்ள நோக்கமாகும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்…
இன்றுள்ள சூழ்நிலையில் தமிழருக்கான தலைமை என்ற தகைமையிலிருந்து கூட்டமைப்பும், தமிழரசும் நீங்கியுள்ள நிலையில் அந்த இடத்தை இட்டுநிரப்பி, உறுதியான கொள்கைப்பாட்டுடனான அரசியலை மேற்கொள்ளும் தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பெரும்பலம் பெற்றுவிடக்கூடாது என்ற முனைப்பே தென்னிலங்கையிடமும், இந்தியாவிடமும் காணப்படுகிறது…
ஒற்றையாட்சியை தீவிரமாக எதிர்ப்பது உள்ளிட்ட தமிழர்களின் தேசம் / உரிமைசார் அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் முன்னணி களத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதற்காகவே, பொருளாதார ஊட்டங்களை அள்ளிவீசி அதன் மயக்கத்தில் திளைக்கும் ஒருசிலரை இணைத்து, மாற்றம் / திசைகாட்டி என்று மக்களை திசைதிருப்பும் கயமைத்தனம் மேற்கொள்ளப்படுகிறது என்பதில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்…
தென்னிலங்கையில் வந்த மாற்றம், தென்னிலங்கைக்கானது மட்டுமே. இந்த மாற்றத்திற்கு முன்னதாகவே JVP /NPP, தமிழர் தொடர்பான தனது இனவாத பார்வையை மாற்றிக்கொள்ளாது என்பதை பல சந்தர்ப்பங்களில் தெளிவாக கூறிவிட்டது…
இருந்தும், மக்களை அவர்கள் பின்னால் போக வைக்க எத்தனிப்பது, 30 வருடகாலத்திற்கும் மேலாக மக்களும், தேசத்தின் புதல்வர்களும் புரிந்த உயிர்த்தியாகங்களின் மூலம் தக்கவைக்கப்பட்ட தமிழர் தேசத்தை தென்னிலங்கையிடம் மீண்டும் மீளா அடகுவைப்பதற்கு ஒப்பாகும் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்…
இன்று தென்னிலங்கையில் ஆட்சித்தலைமையில் இருக்கும் JVP / NPP, முன்னைய ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்பும், தென்னிலங்கை இனவாத சக்திகளும் ஒன்றிணைந்து ஒப்புதலளித்து நிலுவையில் இருக்கும் “ஏக்க ராஜ்ஜிய” என்ற ஒற்றையாட்சி தத்துவத்தை மீண்டும் கடுமையாக முன்னிலைப்படுத்தும் தமிழருக்கெதிரான, மிகக்கடுமையான அரசியலமைப்பை நிறைவேற்றுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது…
ஏனைய தென்னிலங்கை இனவாத சக்திகளைப்போலவே, இனவாத / மதவாத பின்ணியிலிருந்து வரும் JVP / NPP தமிழர் தேசத்தில் மாற்றத்தை கொண்டுவருமென்றால் அது தமிழர்தேசத்தை இல்லாதொழித்து ஒரே சிங்கள தேசம் என்ற மாற்றத்தை மட்டுமே கொண்டுவரும்…
இந்த புதிய ஆபத்தான சட்டவரைபை கூட்டமைப்பும், ஏனைய இனவாத சக்திகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்,, அதன் ஆபத்தை உணர்ந்து அதை எதிர்த்து இன்றுவரை குரல் கொடுத்துவரும் ஒரே தமிழர் தரப்பாக தமிழ்த்தேசிய முன்னணி மட்டுமே உள்ளது…
அதனால்த்தான், முன்னணியை தமிழர் அரசியலிலிருந்து ஒதுக்க இனவாத JVP / NPP பாடுபடுகிறது. அதனாலேயே பொருளாதார வசதிகள் மூலம் மயக்கப்படும் ஒருசிலரை வைத்து, “மாற்றம் / திசைகாட்டி” என்று மக்களை திசைதிருப்பி தமிழர் அரசியலை குழிதோண்டிப்புதைத்து, தமிழர் தேசத்தின் இருப்பையும், உரிமைசார் போராட்டத்தையும் இல்லாதொழிக்க நம்மவர்களையே பயன்படுத்தும் கயமைத்திட்டம் அரங்கேற்றப்படுகிறது…
இத்திட்டத்துக்கு இன்னும்
வலுச்சேர்ப்பதற்காகவே “சுயேச்சைகள்” என்று பெருந்தொகையானவர்கள் இப்போது களமிறக்கப்பட்டுள்ளார்கள். இந்த சுயேச்சைகளின் பெரும்பணி யாதெனில், தமிழர்களின் வாக்குபலத்தை சிதைத்துவிடுவதன் மூலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கக்கூடிய வாக்குபலத்தை வலுவிழக்கச்செய்து, அதன் மூலம் இத்தேர்தலில் பலமான, உறுதியான தமிழர் தரப்பொன்றை வரவிடாமல் தடுத்து, தென்னிலங்கை இனவாதத்தின் கனவான “ஏக்க ராஜ்ஜிய” வை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதேயாகும்…
இதற்காகவே இந்த சுயேச்சைகளுக்கு பொருளாதாரபலம் ஊட்டப்படுகிறதென்பது, களத்தில் நிற்பவர்களால் தெளிவாக்கப்பட்டுள்ளது…
எனவே, இந்நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கவனிக்க வேண்டிய பிரதான விடயங்களான,
1. தமிழர்களின் பிரதிநிதிகளாக யார் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவும்…
2. திசைகாட்டி / மாற்றம் என்ற மாயைகளின் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து கொள்ளுதலும்…
3. சுயேச்சைகள் என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் பின்னால் உள்ள, தமிழர்களின் வாக்குபல சிதைப்பு என்பதை புரிந்து கொள்ளுதலும்…
மிகமிக அவசிமானவை…
இவை மூன்றையும் பகுத்தாய்து பார்க்கும் மக்களின் தீர்க்கமான முடிவு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற சக்தியை பலப்படுத்தி, பெரும்பான்மையாக வாக்களித்து, அவர்ளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை வழங்கி, தமிழர் அரசியலை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் உறுதிபெற வைப்பதேயாகும்…
குகன் யோகராஜா
18.10.2024