கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் ராணியின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கைபேசியில் கேம் விளையாடி சுற்றித் தெரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த ஈழத் தமிழர் இளைஞர் நிரோஷன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு படுத்து கிடந்துள்ளார்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த நிரோஷனை அவரது நண்பர்கள் மண்டபம் முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் தனியார் வாகன மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு செல்லாமல் தனது கைப்பேசியில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்த இளைஞரால் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.