தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் திருமிகு காண்டீபன் அவர்களின் இதுநாள் வரையிலும் உள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் தேசியத்தலைவர்மீது அவர் கொண்டுள்ள பற்றுதிகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு தனியார் ஊடகம் ஒன்றின் செவ்வியின்போது ஒருமையில் பேசினார் என சில சமூக ஊடகங்களும் இணையங்களும் சில அடிவருடி அரசியல் சிந்தனையாளரும் விமர்சனம் செய்து வருவது சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவே உணரமுடிகின்றது.
தற்போது தாயகத்தில் துணிச்சலாகவும் நெறி தவறாமலும் நேர்பட பேசிவருகின்ற சட்டவாளர்களில் திருமிகு காண்டீபன் அவர்களும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
கடந்த 11 வருடங்களில் ஊடகங்களிலும் அரங்குகளிலும் அரசியல் மேடைகளிலும் ஆணித்தரமான கருத்துக்களை முன்நிறுத்தி வருவதாலும் மக்களுக்கான தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வருவதாலும் மக்கள் யார் உண்மையானவர்கள் என்று உணர்ந்து வரும் நிலையில்
திட்டமிட்டு முட்டையில் மயிர் பிடுங்கும் விமர்சனங்களை முன்வைத்துவருபவர்கள் எதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு வங்கியை நிரப்பலாம் என்ற நப்பாசையில் இப்படியான இழிய செயலில் இறங்கி இருப்பதை உணரக்கூடியதாக இருப்பதாக அரசியல் அவதானிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.அத்தோடு கொள்கை விலகிநிற்கும் சுமத்திரனோடு ஒப்பிட்டு சேறு பூச நினைப்பது சிலரின் அரசியல் சூனியத்தை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமர்சனங்களுக்கு பின்பு சட்டத்தரணி காண்டீபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை இங்கு இணைக்கின்றோம்.
நான் அண்மையில் பங்குபற்றியிருந்த தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்இ நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் அவரது வழிநடத்தலில் விளைந்த ஆயுதப் போராட்டத்தின் மீதும் கொண்ட தீராத பற்றின் வெளிப்பாடே. நான் உதிர்த்த வார்த்தைகள் மூலம் என் ஆழ் மனதின் எங்கேனும் ஓர் மூலையிலாது துரோகத்தின் சாயல் துளிர்விடும ஆயின் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய எங்கள் மறவர் தியாகங்கள் என்னை நிச்சயம் காவு கொள்ளட்டும். நான் என் இனத்துக்கு நேர்மையான உண்மையான அரசியலை செய்யவில்லை என்றால் என்னை ஆட்கொண்ட என் தலைவன் மரணத்தை எனக்கு பரிசளிக்கட்டும்.
என் தலைவன் வகுத்த இலட்சியப் பாதையில் தேச விடுதலைக் கனவுடன் பயணிக்கும் உங்கள் மனங்கள் நான் உதிர்த்த வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஆயிரம் தடவைகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிப்பதற்கு முனையும் பிரகிருதிகளுக்கும் நிச்சயம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் பிணத்தின் மீதேனும் உங்கள் ஈன அரசியலுக்கு இடமில்லை.
என்றும் உங்கள்
நடராஜர் காண்டீபன்