முதலில் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் திருத்தப்படவேண்டும்.

You are currently viewing முதலில் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் திருத்தப்படவேண்டும்.

இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைத்து இனத்தவரும் வாழவேண்டுமானால் முதலில் தவறான செயற்பாடுகள் திருத்தப்படவேண்டும். பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்ட காணி உறுதியின் அடிப்படையில் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இடம் இன்றும் வெற்றுக்காணியாகவே உள்ள நிலையில், ஏன் மதத்தின் பெயரால் தனியார் காணிகளை மக்களிடமிருந்து தவறான வழிகளில் பறித்தெடுக்கிறீர்கள்? என்று இன்று நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றும்போது –
ஆறு ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்தி சிறிலங்கா இராணுவத்தினரால் தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் சட்டவிரோத கட்டுமானத்துக்கு அடிக்கல் இடப்பட்டபோதே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த செயற்பாடு சட்டவிரோதமானது என எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்துவதாக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீhமானமும் நிறைவேற்றப்பட்டடிருந்தது. ஆனால் உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் அந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் முன்னைய பாராளுமன்ற காலத்திலும் சுட்டிக்காட்டப்பட்டபோது, பிரதி பாதுகாப்பு அமைச்சரால் யாழ்ப்பாண அரச அதிபர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர்களிடமிருந்து அறிக்கை கோரப்பட்டிருந்தது. 2023 மே மாதம் 22 ம் திகதிய பாராளுமன்ற ஹன்சாட்டிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் விகாரை தனியார் காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்தவித அனுமதியும் பெறப்படாமலேயே முறையற்ற விதமாகமே இராணுவத்தினரால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே –
நீங்கள் கூறுவதுபோல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைத்து இனத்தவரும் வாழவேண்டுமானால் முதலில் தவறான செயற்பாடுகள் திருத்தப்படவேண்டும். பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இணைக்கப்பட்ட காணி உறுதியின் அடிப்படையில் விகாரை அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இடம் இன்றும் வெற்றுக்காணியாகவே உள்ளது. அப்படியானால், ஏன் மதத்தின் பெயரால் தனியார் காணிகளை மக்களிடமிருந்து தவறான வழிகளில் பறித்தெடுக்கிறீர்கள்? என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply