தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணித்தலைவியும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமாகிய திருமதி. வாசுகி சுதாகரன் மீது தாக்குதல் முயற்சி இன்று (07.02.22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த விபரங்களை அறிந்துகொள்ளுமுகமாக “தமிழ்முரசம்” அவரை நேரடியாக தொடர்புகொண்ட போது, தனது உந்துருளியில் தான் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில், பின்னால் வேகமாக வந்த மகிழூந்து தன்மீது வேண்டுமென்றே மோதியதாகவும் எனினும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மகிழூந்து அப்பகுதியில் நின்ற பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டபோது, குறித்த மகிழூந்து, அரசியல் பின்னணி கொண்ட ஒருவரது வாகனமென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மோதல் சம்பவம் குறித்து வினவிய பொதுமக்கள் மீது மகிழூந்தில் வந்தவர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 30.01.2022 அன்று, 13 ஆவது திருத்த சட்டத்தை நிராகரிப்போம் என்ற கருப்பொருளில், யாழ் நகரை அதிரவைத்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் மக்களை ஒழுங்கமைப்பதில் திருமதி வாசுகி சுதாகரனும் காத்திரமான பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த போராட்டத்தை தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நேர்மையான, விட்டுக்கொடுப்பில்லாத தமிழ்த்தேசியத்தின் உண்மைத்தன்மையை படிப்படியாக மக்கள் புரிந்துகொள்ள தலைப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான மக்களாதரவு பெருகிவரும் நிலையில், வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக மக்களாதரவு பெற்ற அரசியலாளர்கள்மீது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதை “தமிழ்முரசம்” வானொலி மிக வன்மையாக கண்டிப்பதோடு, இவ்வாறான அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும், அதேவேளை, நியாயங்களை தட்டிக்கேட்ப்பதற்கு மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.