ஜப்பானின் முன்னாள் பிரதமர், 67 அகவை நிரம்பிய “Shinzo Abe”, தேர்தல் பரப்புரையின் போது சுட்டுக்கொல்லப்பட்டமை உலகளாவிய ரீதியில் பேசு பொருளாகவும், அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகவும் உள்ளது.
உலகமயமான பொருளாதார கட்டமைப்பிலிருந்து, ஜப்பானை மீட்டு, அதனுடைய பொருளாதார பலத்திலேயே மீண்டும் ஜப்பானை நிலை நிறுத்தி விடுவதற்காகவே தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை செலவு செய்த இவர், ஜப்பானின் உறுதிமிக்க “தேசியவாதி” என அறியப்பட்டவர். அவரின் இந்த நீண்ட திட்டத்துக்காக அவர் சூட்டிய பெயர், “Abenomics” இந்த “Abenomics” திட்டமே அவரது உயிரை காவு கொண்டுள்ளது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
ஜப்பானில் நீண்டகாலமாக நிலவிவரும் குறைந்த பணவீக்கத்தை இல்லாதொழிப்பதையும், மிக வயதானவர்களையே அதிகமாக கொண்ட, அதே நேரத்தில் மக்கள் தொகையின் வளர்ச்சி மிக மந்தமாக இருக்கும் நிலையில் பாரிய மாற்றங்களை கொண்டுவருவதையும் தனது சவால்களாகவே எடுத்துக்கொண்டிருந்த “Shinzo Abe”, ஜப்பானின் பாரம்பரிய பெறுமானங்களை பாதுகாப்பதிலும், நாட்டின் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டியதால், இவ்விதமான செயற்திட்டங்களை நேர்சீராக நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை விரைவுபடுத்துவதற்காக நாட்டின் அடிப்படைச்சட்டத்தின் இறுக்கத்தை தளர்த்துவது பற்றியும் “Shinzo Abe” அதிகமாக பேசி வந்திருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின் பின்னதாக ஒழுங்கமைக்கப்பட்ட ஜப்பானின் அடிப்படைச்சட்டமானது, மிகப்பலமான பாதுகாப்புக்கட்டமைப்பை ஜப்பான் ஏற்படுத்திக்கொள்வதற்கு இடமளிக்கவில்லை என்பது, நாட்டின் அடிப்படைச்சட்டத்தின் இறுக்கத்தை தளர்த்த வேண்டிய யதார்த்தத்தை “Shinzo Abe” இற்கு உணர்த்தியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஜப்பானினுடைய பாதுகாப்பு சார்ந்து, அந்த நாடு மேலும் பலம் பெறும் வகையில், ஜப்பானிய பாதுகாப்புத்துறைக்கு அதிகளவிலான நிதிகளை தனது ஆட்சிக்காலத்தில் ஒதுக்கிய “Shinzo Abe”, சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக ஏனைய ஆசிய நாடுகளோடு இணைந்து கூட்டு இராணுவக்கட்டமைப்பையும் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தமை, உலகப்போரின்போது ஜப்பான் கொண்டிருந்த அபரிமிதமான இராணுவ பலத்தையும், வீரியத்தையும் மீண்டும் ஜப்பான் அடைந்துவிடும் என்ற அச்சம் உலக வல்லரசுகளுக்கு ஏற்பட்டமையை மறுத்துவிட முடியாது.
மாறிவிட்ட உலக பொருளாதார கொள்கையில் அடிபட்டுப்போய்விட்ட ஜப்பானின் தனித்துவத்தை உலக அரங்கில் மீண்டும் கொண்டுவருவதற்கான தனது வெளியுறவுக்கொள்கையிலும் விட்டுக்கொடுப்பில்லாத நகர்வுகளை மேற்கொண்டுவந்த “Shinzo Abe”, ரஷ்யாவுடன் ஜப்பானுக்கு இருக்க வேண்டிய நெருக்கமான தொடர்புகள் பற்றியும் ஆழமான புரிந்துணர்வுகளை கொண்டிருந்ததால் ரஷ்யாவுடனும் இணக்கமான போக்கையே தொடர்வதற்கு விரும்பினார்.
ஜப்பானின் வரலாற்றில் மிக நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் என, ஜப்பானின் வரலாற்றில் இடம்பெற்ற “Shinzo Abe”, தனது அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் தொடர்பாக வெளிவந்த சர்ச்சைகள், அவரது மனைவி சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றிவந்த கல்லூரியின் நிர்வாகத்தின் முறைகேடுகளில் அவரது மனைவியும் சம்பந்தப்பட்டிருந்ததாக வெளிவந்திருந்த தகவல்கள், மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், பெருந்தொற்றை அவரது அரசு கையாண்ட விதம் போன்றவற்றால் அவரது அரசுமீது மக்கள் கொண்டிருந்த அபிமானம் குறைந்ததால் ஆட்சியை “Shinzo Abe” இழந்திருந்தார்.
இப்போது, மீண்டும் ஜப்பானின் ஆட்சிப்பொறுக்கு இவர் வந்தால், ஜப்பானின் பாதுகாப்புத்துறை மீண்டும் பலம்பெறலாம்; ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி, உலகப்பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவரலாம்; சர்வதேச அரங்கில் ஜப்பான் மீண்டும் நிர்ணயிக்கும் சக்தியாக வரலாம்; பலம்பொருந்திய நிலைக்கு வரக்கூடிய ஜப்பான், ரஷ்யாவுடன் நேசசக்தியாகவே இருக்கும் என்பது போன்ற சர்வதேச ஆதிக்க சக்திகளின் அச்சம், “Shinzo Abe” மீதான படுகொலையின் பின்னணியாக இருக்கலாமென்பது மறுதலிக்க முடியாதது. காலங்காலமாக உலகநாடுகளில், அந்தந்த நாடுகளின் “தேசியவாத தலைவர்கள்” என அறியப்பட்ட பல தலைவர்கள் பல்வேறு வழிகளிலும் இல்லாமல் செய்யப்பட்ட வரலாறுகளை உற்றுநோக்கும்போது, அதுவும், ஜப்பானிய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரரை வைத்து முடிக்கப்பட்ட “Shinzo Abe” மீதான படுகொலையும் இதே வரிசையில் சேர்க்கப்படக்கூடியது என்றே கருதப்பட முடியும்.