ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து, பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று இலங்கை திரும்பவுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்படும் அவர்கள் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மூவரும் நாடு திரும்பு வகையில், கடந்த வாரம் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று காலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார்.