அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன
வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெள்ளத்திற்கு முதல் மடிச்சு கட்டி மற்றும் கபிலநிற தத்தி போன்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் , அவற்றிலிருந்து காப்பாற்றி வயல்நிலங்களை பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தினால் தற்போது அவை அழிவடைந்திருப்பதாகவும், இந்த அரசாங்கம் தமக்கான இழப்பீட்டினை தந்துதவினால் மேலும் தாங்கள் விவசாயத்தினை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த முறை துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் 14590 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மையினை செய்து வருகின்றனர்.
இதேவேளை துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளில் இந்தமுறை 7840 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மையினை செய்கின்ற இதே வேளை 2300 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்பட்டிருந்ததுடன் அழிவடைந்தும் இருப்பதாக துணுக்காய் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரத்தினம் வசந்தன் கூறியுள்ளார்.
மேலும், 3800 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்பட்டிருந்ததுடன் அழிவடைந்தும் இருப்பதாக பாண்டியன்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தார் தனபாலசிங்கம் குணாளன் தெரிவித்துள்ளார்.