முல்லைத்தீவு (Mullaitivu) – ஒட்டுசுட்டான், வடக்கு வாசல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் இனம் தெரியாத மூவரால் தாக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள உணவகம் மற்றும் புதுக்குளம் வீதியில் உள்ள உதிரிகள் வாணிபம் ஆகியவற்றின் உரிமையாளரே இன்று (21.08.2024) நண்பகலில் அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தாக்கப்பட்ட நபர், இன்று வர்த்தக நிலையத்தினை திறந்து வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போது நண்பகல் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த நபர்கள், ஒரு மோட்டார் சைக்கிளில் மூவராக வந்திருந்ததோடு இரும்பு கேபிள்களால் தாக்கி வர்த்தகருக்கு காயத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், வர்த்தகர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பில் ஒட்டுசுட்டான் சிறீலங்கா காவற்துறையினருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கடந்த 18.07.2024 அன்று அதிகாலைப்பொழுதில் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வாறு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பொதுமக்கள் இனம் தெரியாதவர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதால் பொலிஸார் குற்றச் செயல்களை தடுத்து மக்களின் இயல்பான வாழ்விற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களிடையே அதிருப்தி நிலை ஏற்படும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.