நான் நடந்துகொண்டிருந்தேன்….
ஆடைகளைந்து
அம்மணமாக்கப்பட்ட உணர்வுடன்
நான் நடந்துகொண்டிருந்தேன்….
ஒளியிழந்த கண்கள்
ஒட்டிய வயிறு
உலர்ந்த நாக்கு
ஒடுங்கிய உயிர் என அன்று
நான் நடந்துகொண்டிருந்தேன்….
எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
முதியோரை
குழந்தைகளை
காயப்பட்டவரை
இறந்தவரை மட்டுமல்ல
எங்களுக்காய் களத்தில் நின்றவர்களையும்
விட்டுவிட்டு
நான் நடந்துகொண்டிருந்தேன்….
தீ என்னைத்துரத்திக்கொண்டிருந்தது.
வரமுடியாமற் தவித்தோரின்
உயிரின் ஓசை என்
செவிகளை நிரப்பியது…..
இரும்புச் சிதறல்கள் பட்டு
நைந்துபோன நிலையில்
நான் அணிந்திருந்த ஆடைதவிர
ஏதுமிருக்கவில்லை என்னிடம்
வாட்டிவதைத்த பசியோடு
வலிகள்…
வேதனைகள்…..
தாங்கி நான் நடந்துகொண்டிருந்தேன்….
ஒரு நிலம்…
ஓர் இனம்
ஒருதொகை உயிர்கள்
என்முன்னாலே
எரிந்ததை பார்த்தபடியும்
அழுகுரல்களை கேட்டபடியும்
குருதியாற்றை கடந்து
நான் நடந்துகொண்டிருந்தேன்….
சாவு எங்கள் தோள்களில்
குந்தியிருந்து சிரிக்க
கல்லும் முள்ளும்
கால்களை கிழிக்க
ஒவ்வொரு உடலும்
பிணமாக கனக்க…..
வலிக்கும் மனத்துடன்
நான் நடந்துகொண்டிருந்தேன்….
எல்லோரையும் வரவேற்க
பாதைகளில் நின்றவர்கள்
பேசிய மொழி புரியாதபொழுதும்
ஏளனம் அதுவென எண்ணியபோது
தலையை குனிந்தேன்.
போதையில் அவர்கள்
அருவெறுப்பான வார்த்தைகளை தூவி
வரவேற்றபோது…
கிடைக்காத மரணத்தை நொந்தபடி
நான் நடந்துகொண்டிருந்தேன்….
உயிர்வதை என்பதை
அன்றுதான் உணர்ந்தேன்.
ஒருதுளி நீருக்கும்
உரத்துச்சிரித்து
உயிரை வதைத்துவிட்டே
ஊற்றினான் பகைவன்……
ஊர்தியில் ஏற்ற
தெரிவுகள் நடந்தபோது
உலகெல்லாம் உணர்ந்து
ஓதுதற்கரிய இறைவரை வேண்டி
நான் நடந்துகொண்டிருந்தேன்….
சாவது என்பது
சரணடைதலைவிட மேலானதென
அந்தக்கணங்களில் உணர்ந்தபடியும்
எங்கோ ஒருதொலைவில்
எங்களுக்கான ஒளித்துளி
கிடைக்கலாம் எனவும் எண்ணியபடி
நான் நடந்துகொண்டிருந்தேன்….
ஆண்டுகள் நகர்ந்துகொண்டிருக்க
உள்ளே ஒருவலி என்னை
தின்றுகொண்டிருக்கிறது….
எதற்காக இன்னும் என்னை
விட்டுவைத்திருக்கிறது காலம் என்ற
கேள்வியுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நான்.
-சிவசக்தி-