முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டதை சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், இவ்வாறு காணாமலாக்கப்பட்ட 14 மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சபையில் ஆவணப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இது தொடர்பான தகவல்களை அவா் வெளியிட்டார்.
தம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்களை வெளியிடுவதாக அவா் தெரிவித்து வெளியிட்ட காணாமலாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பிள்ளைகள் விபரம் வருமாறு,
1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி யின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரனின் மகள் அறிவுமதி,
3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
5. மணலாறு தளபதி மஜீத்தின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மகன் ஜனகன் மகேந்திரன்,
7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியனின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜாவின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி யின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
10. சுடரின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமனின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
12.அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கனின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசனின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவானின் மகள் எழில்நிலா சற்சுதன் ஆகியோர் இவ்வாறு காணாமலாக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.