முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி..!
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை நேற்றையதினம் (14) காலை ஆரம்பித்துள்ளார்.
ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா நேற்றையதினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர், உணவு உட்கொள்ளாமல், நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்துள்ளார்.
அவர் முன்வைக்கும் கோரிக்கைகளாவன:
1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
3. மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
5. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
7. தமி.ழீ..ழ விடுதலைப் பு..லிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாகக் கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சக போராளிகளை காரணம் காட்டி, பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
8. முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.
10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இந்த 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராளி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராளி வனகுலராஜா அவர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

