சிங்கள அரசு நடத்திய தமிழின இனப் படுகொலையின் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக பிரித்தானிய கலாச்சார, ஊடக மற்றும் விளையாட்டுத்துறை மாநில நிழல் செயலாளர் தங்கம் டெபோனையர் (Thangam Debbonaire) தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேலும் தாமதிக்காது முன்னெடுப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என டெபோனையர் கோரியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர் தாயகத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிங்கள அரசு நடத்திய தமிழின இனப் படுகொலையில் பல்லாயிரக்காண தமிழ் மக்கள் நேற்றைய தினம் நினைவு கூரப்படுகின்றனர். இறுதி கட்ட போரின் போது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டன.
போரில் நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் நினைவுகூருவதோடு இந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களுடன் நிற்குமாறு நான் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோருகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கேற்ப போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் மதித்து அவர்களை பாதுகாக்குமாறு நான் சிறிலங்கா அரசிடம் கோருகின்றேன். சமாதானம், நல்லிணக்கம், மற்றும் நீண்ட கால அரசியல் தீர்வை நோக்கி பயணிக்குமாறும் சிறிலங்கா அரசிடம் கோருகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.