புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார். இந்த வைரஸ் இதுவரை 1,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது.
சீனாவுக்கு வெளியே இரண்டு உயிர்கள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன, ஆனால் இவர்கள் இருவருமே சீனாவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சமீபத்திய நாட்களில், பிரான்சிலும், இங்கிலாந்திலும் சீனாவுக்குச் செல்லாத நபர்களிடையே இந்த தொற்றுப் பாதிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
“சீனாவில் 99 சதவிகித தொற்றுக்கள் உள்ள நிலையில், இந்த நெருக்கடி நிலைமை, இப்பொழுது உலகின் பிற பகுதிகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று செவ்வாயன்று ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா. அமைப்பும் வைரஸ் தொற்று குறித்து இரண்டு நாள் மாநாட்டை இன்று ஆரம்பித்துள்ளது.
சீனாவில் திங்களன்று 108 பேர் வைரஸால் இறந்ததாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவே டிசம்பரில் வைரஸ் தோன்றிய பின் முதல் தடவையாக ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நாளாகும். (NTB)