முழு ஊரடங்கு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறிகளின் விலையும் ஒரு மணி நேரத்தில் மூன்று மடங்கு உயர்ந்தது.
சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கில் கோயம்பேடு சந்தை மற்றும் மொத்த சந்தை, நடமாடும் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னறிவிப்பின்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு காரணமாக இன்று காலை கோயம்பேடு காய்கறி சந்தையில் இயல்பை விட அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் கோயம்பேடு சந்தைப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது. சிறு குறு வியாபாரிகள் 4 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை ஒரே நாளில் வாங்கிச் சென்றனர்.
இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் ஒரு மணி நேரத்தில் 3 மடங்கு வரை உயர்ந்து விற்கப்பட்டது. அனைத்து காய்கறிகளும் காலை 6 மணிக்கு விற்கப்பட்ட விலையைவிட ஏழு மணிக்கு இருபது ரூபாய் வரை விலை உயர்ந்தது.