நோர்வே, ஒஸ்லோவில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த 13 வயது சிறுவன் “தேனுஜன்” கடந்த 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் மகிழூந்து விபத்தொன்றில் மரணமடைந்திருந்தார். தனது நண்பர்களுடன் வீதியை கடக்க முற்பட்ட தேனுஜனை, அவ்வழியால் வந்த மகிழூந்து ஒன்று மோதித்தள்ளிவிட்டு சென்றிருந்தது. இதில் படுகாயமடைந்திருந்த தேனுஜன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், கடுமையான காயங்கள் காரணமாக அடுத்தநாள் மறைந்தார்.
தேனுஜனை மோதித்தள்ளிவிட்டு தப்பியோடிய மகிழூந்தின் சாரதி பின்னதாக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, பூர்வாங்க விசாரணைகள் நடத்தப்பட்டதில், போதையூக்கி பாவித்த நிலையிலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமலும் மகிழூந்தை செலுத்தியிருந்ததாக, குறித்த சாரதிமீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே சில தடவைகள் போதையூக்கி பாவனையில் மகிழூந்து செலுத்தி, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர் எனவும், இதனாலேயே அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது எனவும் காவல்துறை மேலும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இரு வருடங்கள் கழிந்த நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த தேனுஜனின் பெற்றோர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது இளைய மகனான தேனுஜன், விபத்தில் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக மறைந்து விட்டதான தகவல் தம்மிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டபோது, தேனுஜனின் உடலுறுப்புக்களை தானமாக கொடுக்க முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டதாகவும், சிறு வயதிலிருந்தே அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை தேனுஜனிடம் இருந்ததாகவும், அதனால், தேனுஜனின் உடலுறுப்புக்களை தானமாக கொடுப்பற்றக்கு முழுமனதோடு சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேனுஜனின் உடலுறுப்புக்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, தான் மறைந்தும் மூன்று உயிர்களை தேனுஜன் வாழ வைத்திருப்பதோடு, புத்திர சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், நடைமுறை விடயங்களை நன்கு புரிந்துகொண்டு, தமது மகனின் உடலுறுப்புக்களை தானம் செய்ய முன்வந்த தேனுஜனின் பெற்றோரும் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.