நெடுந்தீவு உட்பட வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில் –
தற்போது வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அவற்றில் நெடுந்தீவும் உள்ளடங்குகின்றது. நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது நாட்டில் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குதிரைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
குறிப்பாக நெடுந்தீவில் மிகவும் உயரமாகக் காணப்பட்ட குதிரைகள், காலநிலை உள்ளடங்கலாக காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உயரம் குறைந்தவையாக மாறிவிட்டன. எனவே வனஜீவராசிகள் சட்டத்தின் ஊடாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன.
அவ்வாறிருக்கையில் அந்தத் தீவை எவ்வாறு பிறிதொரு நாட்டிற்கு வழங்கமுடியும்? எனவே இவ்விடயத்தில் சூழலியலாளர்கள் தலையீடு செய்யவேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனைசெய்து, அதற்குப் பதிலாக மூன்று மாதகாலத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது.
ஆனால் மூன்று மாதங்கள் முடிவடைந்த பின்னர் நாட்டிற்கு எரிபொருளும் கிடைக்காது. நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களும் இந்தியாவிற்குச் சொந்தமாகிவிடும். இதனால் நாட்டிற்குக் கிடைக்கின்ற பயன் என்ன?
மேலும் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தங்களாலும் பேணிவரும் தொடர்புகளாலும் சந்தேகமடைந்திருக்கும் சீனா, கடந்த 10 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கென சீனத்தூதரகத்தின்கீழ் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
எனவே எதிர்வருங்காலங்களில் சீனா இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கமுடியாது என்று குறிப்பிட்டார்.