மூளையை பாதிக்கும் “கொரோனா” வைரசுக்கள்! அமெரிக்க வைத்தியர்கள் புதிய தகவல்!!

You are currently viewing மூளையை பாதிக்கும் “கொரோனா” வைரசுக்கள்! அமெரிக்க வைத்தியர்கள் புதிய தகவல்!!

“கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்ட 58 வயதுடைய அமெரிக்க பெண்மணியொருவரின் மூளையில், “கொரோனா” வைரசுக்கள் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக “U.S National Library of Medicine” என்ற மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, “கொரோனா” வைரசால் மூளையும் பாதிப்படையும் என்பது உலகளாவிய ரீதியில் முதன்முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூளைப்பாதிப்பு அவதானிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமெரிக்கப்பெண்மணி, தொடக்கத்தில் இருமலை கொண்டிருந்ததாகவும், பின்னர் தீவிர காய்ச்சல் பீடித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது அவரது உணர்வு நிலையில் பாரிய மாற்றங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் வைத்தியர்கள், குறித்த பெண்மணி நிலை தவறியிருந்ததாகவும், குழம்பிய நிலையிலும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட மேற்படி பெண்மணிக்கு “MR” ஊடுகதிர் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது நினைவுச்சக்தி மற்றும் ஞாபகசக்தியை கையாளும் மூளையின் பகுதிகளில் சேதங்களும், இரத்தக்கசிவும் அவதானிக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கும் வைத்தியர்கள், மேற்படி அவதானிப்புகள், மூளையில் ஏற்படும் உடனடியான அழற்சிகளாக கொள்ள முடியுமென்றும், இவ்விதமான உடனடி அழற்சிகள் ஏற்படுபவர்கள் உயிர்பிழைப்பது அரிதெனவும் தெரிவிக்கும் அதேவேளையில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிழைத்தாலும் அவர்கள் மூளையின் அரைப்பகுதி செயலிழந்த நிலையிலும், அதனால், சரளமாக பேசுவதில் சிரமம், மற்றும் திடமாக நடக்க முடியாமை உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாககலாமெனவும் தெரிவிக்கின்றனர்.

எனினும், காலப்போக்கில் இவ்விதமான பிரச்சனைகள் சரியாகும் வாய்ப்பு இருந்தாலும், மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்பு நிரந்தரமாகிவிடும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

செய்தி மேம்பாடு:

“கொரோனா” தொற்றுதலுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் மூளையில் பாதிப்புக்கள் ஏற்படுவதாக நோர்வேயிலும் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதீதமான தலைவலி, அதீதமான வயிற்றுவலி, சுவையை உணரும் தன்மையில் குறைபாடு, வாசனையை நுகரும் தன்மையில் குறைபாடு உள்ளிட்ட “கொரோனா” அறிகுறிகளை கொண்டுள்ள நோயாளிகளையிட்டு அதிக அவதானமாக இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தலைவலி, மயக்கம், நினைவு தவறுதல், பக்கவாதம், வலிப்பு போன்றவையோடு, நரம்பியல் தொடர்பான சிக்கல்களையும் “கொரோனா” தொற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கலாமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையின் குறிப்புக்களின்படி, மிகக்குறைந்தளவு “கொரோனா” நோயாளிகளிடம் மேற்கூறப்பட்ட அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாச சம்பந்தமான இடர்ப்பாடுகளே அதிகளவில் அவதானிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

“கொரோனா” வைரஸின் நேரடியான பாதிப்பாக மூளையில் ஏற்படும் பாதிப்புக்கள் அமைகின்றனவா என்பதை உறுதியாக சொல்லமுடியாதுள்ளதாக மேலும் தெரிவிக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள், நோயாளியிடம் குழப்பநிலையோ அல்லது மனநிலை சமநிலை அவதானிக்கப்பட்டாலோ உடலின் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் எழலாமெனவும், அதனையிட்டு அவதானமாக இருக்கவேண்டுமெனவும் எச்சரித்துள்ளன.

நோர்வேயின் நரம்பியல் நிபுணரான “Anne Hege Aamodt” தெரிவிக்கும்போது, சீனாவின் “Wuhan” மாகாணத்தில் “கொரோனா” வால் பீடிக்கப்பட்டவர்களிடம் நரம்பியல் சமநிலையின்மைக்கான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பதோடு, “கொரோனா” வால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தவர்களிடம் மிக அதிகமான நரம்பியல் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டதாகவும், தெரிவிக்கிறார்.

எனினும், அமெரிக்காவின் “நியூ யோர்க் டைம்ஸ்” பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், “கொரோனா” வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை அழற்சிக்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள