2009 மே திங்கள் மலர்ந்தது!
மேதினி எங்கும் தமிழர் வாழ்வில்
இருள் கவ்வியது!
உயிர் வாழ உரிமைக்காய் போராடிய
இனமொன்று மூச்சுத்திணறியது!
மயிரிழையில் கூட தப்பமுடியாதபடி
நெருக்கமாய் அருகில் வீழ்ந்த
நெருப்புமழையில்
உறவுகளின் உயிர்கள் கருகிவீழ்ந்த
கணங்களது!
இரத்தமும் சதையுமாய் பேரிரைச்சலின் நடுவே
கூவிய குரல்களின் வலிகள்
உயிர்வலியாய் உயிரணுவை
அறுக்கிறது !
அன்றைய ஒவ்வொரு இரவுகளும்
முட்படுக்கையாய் மாறியது!
வன்மத்தின் உச்சத்தில்
அரசமரத்தின் அகோரம் அரங்கேறியது!
பெரும் புயல்க்காற்றோடு
சேர்ந்தாடிய அரசமரக்காடுகள்
ஆனா எழுதிய மண்ணை
சூறையாடியது!
கண்ணியமாக சுயநிர்ணய
உரிமைக்கா போராடியமண்
கயவரின் கால்படிந்து
கனவுகள் கரைந்தது!
புலம் பெயர்ந்தமண்ணிலும்
எம் இனம் வாழ எழுந்தோம்!
இரவுபகலாக சர்வதேசத்தின்
மனச்சாட்சிகளை தட்டினோம்!
மனிதநேய மகான்களின்
இதயக்கதவுகள் திறக்க
மனிதநேயக் கதவுகளின் முன்னே
கால்கடுக்க கதறினோம்!
காவல்த்துறையின் கால்களில்
மிதிபட்டு நீதிகேட்டோம்!
பல்லாயிரக்கணக்கில் மக்கள்
கொல்லப்படுகின்றார்கள்
பச்சிளம்பாலகர் பட்டிணியில்
சாகிறாரென கடிதம் கடிதமாக
எழுதினோம்!
எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை!
அநாதைகளாக தெருவில்
நின்றோம்!
யாரும் அருகில் வந்து ஆறுதல்
சொல்லவில்லை!
பக்கத்து பாரில் குத்துப்பாட்டும்
கும்மாளமும் கேட்டது!
திக்கெட்டும் தீண்டாமையில்
மனிநேயம் அலைந்தது!
நக்குண்டார் நாவிழந்தார் எனும்
முதுமொழியின் பொருளுரைத்து
சிக்குண்டு சின்னாபின்னமாகிய
சில சில்வண்டுகளும் சிறகசைத்து
பறந்தது!
கைவிட்ட பட்டத்தின் நூலாய்
மெய்விட்டகன்றது கனவுகள்!
✍ தூயவன்