மாறி மாறி ஆண்ட அரசுகளுக்கு குனிந்து வளைந்து அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகளாக வாழ்ந்த இனத்தில் உரிமைக்காக திருப்பி அடிக்கவேண்டும் என குனிந்த முதுகின் கூன் நிமிர்த்திய தானைத்தலைவனின் வரலாற்றுக்காவியமாக மேதகு வெளிவந்திருக்கின்றது.
அண்மைக்காலமாக இந்திய தேசியவாதிகளால் பிரபாகரன் வேறு தமிழர்கள் வேறு என்ற விம்பத்தை உருவாக்கும் உண்மைக்கு புறம்பான திரைப்படங்களுக்கு மத்தியில் தேசியத்தலைவரின் உண்மையை அவர் உயிருக்கு நிகராக முன்நகர்த்திய ஈழவிடுதலைப்போராட்டத்தின் அறத்தினை அழகாக திரைக்கூடாக கொண்டுவந்திருக்கின்றது மேதகு திரைப்படம்.
தந்தை செல்வா வழியில் அறவழிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இனவாதிகளின் சர்வதிகார சக்கரத்தில் நாள்தோறும் நசிந்து உயிர் போகும் மரணபயத்தில் மக்களின் மனநிலையை வைத்திருந்த அதிகாரவர்க்கத்தின் மொழியில் பேசுவதர்க்காய் வங்கங்கடலோரமாய் மூசியெழுந்து முப்படை கட்டிய தலைவனை கலைத்தாயின் உன்னதபடைப்பால் உயிர்கொடுத்திருக்கின்றது மேதகு திரைப்படம்.
தலைவர் தமிழினத்திற்காக தமிழீழத்தில் பார்வதித்தாயின் கருவறையில் கருக்கொண்டதிலிருந்து
நான்காவது உலகத்தமிழராட்சி மாநாட்டில் 9 தமிழர்கள் சிறீலங்கா காவல்த்துறையால் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த துரோகி யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா தேசியத்தலைவர் அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு காடுகளுக்குள் மறைவிடம்தேடி ஓடும்வரைக்கும் வரலாற்று நீரோட்டத்தில் நேர்த்தியாக திரிபு படுத்தப்படாது உண்மையை உள்ளபடியே உரைத்து நிற்கிறது மேதகு திரைப்படம்.
முள்ளிவாய்க்கால்வரையும் ஈழவிடுதலையின் இலக்கில் பிறழ்வு இல்லாது தன் குடும்பத்தையே இனத்திற்காக அற்பணித்த ஒரு தெய்வீகப்பிறவியின் வரலாற்றுக்காவியமாக உலகத்தமிழர்களின்
இதயத்தில் சிம்மாசனமிட்டு மேதகு திரைப்படம் அமர்ந்துள்ளது.
பணத்தின் குறைந்த வசதியை வைத்து இனத்தின் காவியத்தை இவ்வளவு நேர்த்தியாக
இயக்கிய இயக்குனர் திரைப்படத்தின் உயிரோட்டமாக வரும் இசை, கதாபாத்திரங்கள் காட்சியமைப்பு, அத்தனையும் ஆடம்பரமில்லாத ஆனால் அசத்தலான கலைப்படைப்பாக உலகத்தமிழரின் உள்ளத்தில் பெரு மகழ்ச்சியை விதைத்துள்ளது மேதகு திரைப்படம்.
இத்திரைப்படத்திற்காக எல்லாவழியிலும் பணியாற்றிய எங்கள் உறவுகளுக்கு எமது உவகையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு இத்திரைப்படத்தினை பணம் செலுத்தி பார்த்து உங்கள் முழு ஆதரவை கொடுக்கவேண்டுமென எமது வானொலியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
மனோ நாகலிங்கம்
பணிப்பாளர்
கதைக்களம் நன்றாக இல்லை,காட்சி அமைப்புகளில் குறைபாடு ,அரசியல் பிழைகள் நிறையவே உண்டு.காட்சி அமைப்பபு எங்கள் இடத்தை காட்டுவாதாக இல்லை. (எங்கள் இடத்தில் கோயில் குருக்கள் காட்டிய விதம்) இப்படி பல விடயங்கள். எங்கள் கண்னாடியில் எங்கள் முகம் நன்றாக இருக்க வேண்டும்.