மேதகு 67

You are currently viewing மேதகு 67

ஆண்டுக்கொருமுறை

அழகாய் பூக்கும் பூப்போல

உலகமெல்லாம் ஒரு செய்தி

வரும்!

மாண்டுபோன மாவீரர்களின்

எழுகைநாளில் எரியும்

நெருப்பாய் உரிமையின்

குரலாய்

உயிர்க்கும்!

சூரியனை கண்ட தாமரையாய்

சூரிய தேவனைக் கண்டதும்

உயிர்கொண்ட அகிலத்து

அகங்களெல்லாம்

சிலிர்க்கும்!

பிரபாவென்ற பெரும் தமிழை

படிப்பதற்காய்

பல்கலைக்கழகங்களே

செய்திப்பக்கங்களை

புரட்டும்!

ஒரு இனத்தின் காப்பாளனாய்

அறத்தின் நெறிபுரளாக் கொள்கையில்

உதிர்க்கும் வார்த்தைகளில்

தமிழினத்தின் விடியும் திசை

வானத்தில்  செங்கதிராய்

சிரிக்கும்!

கானகத்தில் கூவும் குயிலாய்

வாழும் காலம் வனப்பழகாய்

தோன்றினாலும்

ஆளும் காலம் முழுதும்

நீளும் வலிகளும் கனக்கும் கனவுகளும்

ஆள் மனக்காயங்களை

ஆற்றியிருக்காது!

ஆனாலும்

தோற்றும் ஒவ்வொரு ஆண்டும்

காற்றுக்கூட புகமுடியாத

உறுதிப்பாட்டில்

தமிழரின் உரிமையில்

இறுக்கமும்

ஒழுக்கமும்

இருக்கும்!

அதனால்த்தான்

அவனியின் புலனாய்வும்

அண்ணனிடம் தோற்றுப்போகும்!

எத்தனை இரகசியங்கள்

எத்தனை திட்டமிடல்கள்

எத்தனை தேடல்கள்

எத்தனை உற்பத்திகள்

எத்தனை வியூகங்கள்

எத்தனை மதிநுட்பங்கள்

எத்தனை படைக்கட்டுமானங்கள்

எல்லாமே துரிதமாய்

வளர்ந்ததேன்றால்

அதற்கு இந்த

வரலாறு தந்த வல்லமையே

எமக்கு வரமாய்

கிடைத்ததுதான்!

புராணங்களில்

புரட்டிய வரலாறுகளின்

கதைகளை

நிதர்சனமாக

கண்முன்னே காட்சிகளாய்

மண்ணிற்காய் போராடிய

மகா தலைவனாய்

எல்லோர்

எண்ணங்களிலும்

எழுச்சியின் தீயினை

பற்றவைத்தவர்!

மாறி மாறி ஆண்ட

அதிகார வர்க்கங்களின்

அரசியல்

அடிவருடிகளாய்

தமிழின விடியலின்

தடைக்கற்களாய்

மடைமாற்றிகளாய்

உருமாறிய

அரசியல் தலைமைகள்

மத்தியில்

ஒரு விடுதலைப்

பேரொளியாக

சிறுவயதிலையே

சீறும் சிறுத்தையாகி

வரலாறின் வழிகாட்டியாகி

வாழ்ந்து காட்டியவர்

எங்கள் தேசியத்தலைவர்

மேதகு பிரபாகரன்!

முப்பாட்டன் வழி வந்த

முப்படைத்தலைவனாய்

எட்டுத்திக்கும் தமிழ் மனங்களை

தொட்டு நின்ற

கலங்கரை விளக்காய்

உளங்களில் பிரகாசித்து

ஒளிர்ந்தவர்

எங்கள்

ஒப்பற்ற தலைவன்!

முறத்தால் புலியை

விரட்டிய ஆத்தையை

படித்த எமக்கு

புலியாய் மாறிய கோதைகளின்

வீரவரலாற்றை

ஈழவரலாற்றில்

உருவாக்கியவர்

எங்கள் பெரும்

தலைவர் பிரபாகரன்!

கப்பலோட்டிய தமிழன்

கதையை படித்த எமக்கு

கப்பலையே கட்டி

அதற்கு மேலே சென்று

விமானத்தையும் ஓட்டி

வானிலும் கடலிலும்

தமிழனின் படைகளை

எதிரிக்கு எதிரே

நிறுத்திக்காட்டியவர்!

நிறுத்த முடியாத கடிகாரமாய்

களைத்துப்போகாத புலியாய்

உரிமைக்காக உழைத்தது

மட்டுமின்றி

இடைஇடையே

முளைவிடும் துரோகங்களையும்

துடைத்துக்காட்டியவர்!

நேர்மையானவர் மட்டுமே

உரிமைக்காய் உண்மையாய்

உழைக்க முடியும் என்பதில்

அடிக்கடி கற்பித்தும் காட்டியவர்!

வாய்மை தவறிய மனிதர்

நோய் பிடித்த செடியாய்

போவார்

காட்டிக்கொடுதவர்

கானல் நீராய் மறைவார்

என்ற தத்துவத்தை

இற்றைவரையும்

உணர்த்தியே செல்கிறார்

எங்கள் செல்நெறியர்!

நெஞ்சமெல்லாம்
நெடும் தீயாய்
நிறைந்திருக்கும்
தங்கத்தலைவா!
வஞ்சக உலகமும்
உனை வாழ்த்தும் காலம்
வெகுதூரமில்லை!
கஞ்சியும் இல்லாமல்
களத்தில் போராடிய
உங்கள் ஈகத்தின் கொடையை
இதய இடுக்குகளில்
இறுகச்செருகி
இலட்சிய நெருப்பை
அணைய விடாது
அடைகாப்போமென
அகவைநாளில்
உவகையோடு
வாழ்த்துகின்றோம்!

-தூயவன்-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply