மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
‘Trinco 11’ என அழைக்கப்படும், 11 பேர் காணாமல்போன சம்பவங்களில் தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் ஆகியோருக்கு இப்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது இலங்கைப் படையினர் இவர்கள் ஆவர்.
2020 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
“அவரது கட்டளைப் பொறுப்பின் மூலம், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டது பற்றிய நம்பகமான தகவல்கள் காரணமாக”. “எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை வைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும், அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும், பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் பொருத்தமான கருவிகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.