‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு

You are currently viewing ‘மே 18’  உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு

தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அஃது வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 1
மே 15, 2009, இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட புகைப்படம். இலங்கை, முள்ளிவாய்க்காலில், மே 18, 2009-ல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றதாகவும் சிறுபான்மை தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. (படம்/ இலங்கை இராணுவம், தலைமையகம்)

இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், அரசாட்சி உட்பட ஓர் இனத்தின் ஆளுமையும் அதிகாரமும் மேலோங்கும் நிலையில், அங்கு வாழும் சிறுப்பான்மை இனத்திற்கு எதிரான கொடூரங்களும் கொடுமைகளும் அரங்கேறுவது இயல்பாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.

அவ்வாறு தன் இனத்தைக் கொடூரமாக அழிக்கும் இனத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் போது, அஃது உள்நாட்டுப் போராகவோ அல்லது உள்நாட்டு பிரச்சனையாகவோ உருவெடுக்கிறது. அம்மாதிரியான சூழலில் சிறுப்பான்மை மற்றும் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இனத்திற்கு எதிராக அதிகாரமும் ஆளுமையும் கொண்டிருக்கும் இனம் புரியும் அட்டூழியங்கள் எழுத்துகளில் விவரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

யூதர்களுக்கு எதிராக இட்லர் புரிந்த இன அழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறோம். நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இன அழிப்பு என நம்மில பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 2

ஆனால், உண்மையில் அதற்கு முன்னதாகவே, அதாவது 1915-க்கும் 1920-க்கும் இடையில், சத்தமே இல்லாமல் துருக்கியில் ஓட்டோமான் இனத்தால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ருவாண்டாவில் இலட்ச ஹூடு இனத்தவர்கள் கொல்லப்பட்டதும் கூட இன அழிப்புதான்.

அதுமட்டுமின்றி, 1932 தொடங்கி 1933 வரையில் உக்ரையினில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கை பஞ்சம் கூட இன அழிப்புதான் என வகை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1975-ல் கிழக்குத் தீமோர் மீது இந்தோனேசியப் படையெடுப்பும் இன அழிப்புதான் என்று வகை செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில், ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கமும் அந்நாட்டின் தேசிய இனமும் புரியும் கொடூரங்களையும் கொடுமைகளையும் இந்த உலகம் இன்னமும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான்.

மேலும், ஓர் இனத்தின் பிறப்பைத் தடுப்பது, வழுக்கட்டாயமாக வேறு இனக் குழுவோடு சேர்ப்பது ஆகியவையும் இன அழிப்புதான் என, 1948-ல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இன அழிப்பு என்பது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் எனும் பெரும் நம்பிக்கை தொடர்ந்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நடந்தேறியது. ஆம், சுமார் 10 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதி வடிந்துக்கொண்டிருக்கும் மே 18 இன அழிப்புதான் அது.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 3

இலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 18. பத்தாண்டுகளுக்கும் முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது. காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும், அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது, நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள். துப்பாக்கி தோட்டாக்களுக்கும் எறிகுண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் சூன்யமாகிப் போனது.

போர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாடு தலங்கள் உட்பட பொது மக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில், உச்சக்கட்ட போரின் போது சிங்கள இராணுவம் உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் விட்டு வைக்காமல் குண்டு மழை பொழிந்து கொன்றது. அவர்களின் நோக்கம், விடுதலை புலிகளை வீழ்த்துவதல்ல. மாறாய், தமிழினம் இருக்கவே கூடாது என்பதற்கு இதுவே தக்க சான்று.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 4

மே 18-ல், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை போர் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு இந்த விடுதலை போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

போருக்கு ஒரு நியாயமும் மரபும் உள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைக் கூட கொன்று குவித்து மகிழ்ந்தது சிங்கள இராணுவம். போரில் எந்நிலையிலும் அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது என்பது மனித உரிமைச் சட்டமாகும். இந்த மரபையும் மீறி 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வல்லரசுகளும் ஐநாவும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மௌனம் காப்பதுகூட தமிழினத்திற்கு எதிரான ஒன்றானதாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கை அரசியலில் 1950-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அரசியல், பொருளாதாரம், மொழி, மதம் சார்ந்ததாக அமைந்திருந்த வேளையில், சிங்கள அரசு தனது ஆளுமை மற்றும் அதிகாரத்தைப் பிற இனங்களின் மீது திணிக்கத் தொடங்கியது. இலங்கையின் பெரும்பான்மை இனம், பிற சிறுபான்மையினரை எதிரியாகப் பார்த்தது. அந்நிலையில் தமிழர்கள் பல கட்டங்களில் ஏமாற்றப்பட்டதோடு, தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இதுவே முதன்மை காரணியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 5

தமிழீழ விடுதலைக்காக, புலிகளின் போராட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனித்துவமாகவே இருந்து வந்தது. பலவேளைகளின் புலிகளின் கைகள் ஓங்கியிருந்தது. புலிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியமல்ல என உணர்ந்த சிங்கள இனவாத அரசு, அப்பாவி தமிழ் மக்களைப் பிணை வைத்து பல்வேறு நாடுகளின் உதவியோடு, சூத்திரமாக வீழ்த்தியது. அதர்மமும் அநியாயமும் கொல்லப்பட்டதாக கொக்கரித்தது.

ஆனால், இது நிரந்திரமல்ல. மீண்டும் புலிகள் உயிர்த்தெழுவார்கள், தமிழீழம் உதயமாகும் என உலகத் தமிழர்கள் இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின் போது, படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை சேனல் 4 எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் உறுதி செய்தன. ஐநாவும் இறுதிக்கட்ட போரின் போது, போர் மரபு மீறப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியது.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 6

மேலும், அனைத்துலகப் போர் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியது. ஆனால், இன்று வரை இலங்கை இனவாத அரசுக்கு எதிராக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்கள இராணுவம் கொடுரமான போர் குற்றங்களைப் புரிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியும், பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும் எந்தவொரு விசாரணையுமின்றி, சிங்கள இனவாதம் உலா வருவது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குழித்தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்றுதான் கொதிக்க வேண்டியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக்கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது என்னவொரு அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி மே 2009 வரை சுமார் 1 இலட்சத்து 50 பேரைச் சிங்கள இனவாதம் படுகொலை செய்து, இன அழிப்பினை செய்துள்ளது. இது எவ்வளவு மோசமான வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, உடல் பாகங்களையும் இழந்து நடைபிணம் போல் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பிற நாடுகளில் நாடோடிகளாகவும் சொந்த நாட்டில் அகதிகளாகவும் வாழும் தமிழர்களுக்கு இந்த உலகத்தின் மனிதாபிமானம் தான் என்ன? பாதிக்கப்பட்டவன் தமிழன் தானே என அலட்சியம் தொடர்ந்தால் மீண்டுமொரு விடுதலை போர் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 7

மலேசியாவில், தமிழீழத்திற்கான ஆதரவும் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவும் 1980-கள் தொடக்கம் இருக்கவே செய்துள்ளது. அரசியல் காரணியங்களுக்காக, ஈழத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர், ஈழம் குறித்தோ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தைப் பற்றியோ வாய் திறக்காமல், நாற்காலியின் கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்த போதிலும், போர் காலக்கட்டத்திலும் சரி, நடப்பிலும் சரி, ஈழ மக்களுக்காக மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேரணிகளும் நினைவுக்கூறல் நிகழ்ச்சிகளும் நினைவுறுத்தல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்னாள் இலங்கை அதிபர் இராஜபக்‌ஷே மலேசியாவிற்கு வருகை புரிய முற்படும்போதெல்லாம், மலேசியத் தமிழர்கள் பெரும் எதிர்ப்பினை செய்துள்ளனர். அதனால், பலமுறை இராஜபக்‌ஷேவின் வருகை இரத்தும் செய்யப்பட்டுள்ளது.

2016-ல் இராஜபக்‌ஷே மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி மலேசியாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு வருகை புரிந்தபோது, மலேசியாவிற்கான இலங்கை தூதர்  விமான நிலையத்தில் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்ததாகவும்.

அந்த வகையில், சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என ஆக்கப்பூர்வமானப் பங்களிப்பையும் செயல்பாட்டையும் கொண்டிருக்கும் இயங்கியல் குழுக்களில் ஒன்றாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் தனித்துவமாக விளங்குகிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்கள் ஈழ மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் கொடூரங்களையும் கொடுமைகளையும் மலேசியர்களுக்கு விவரிக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், தொடர்ந்து மே 18-ஐ நினைவுக்கூறும் நிகழ்வும் உச்சக்கட்டப் போரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் நாள், ஜொகூர் பாருவில் அக்குழு அந்த நினைவுநாளை மேற்கொண்டு வருகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கி, இவ்வாண்டு 10-ம் ஆண்டாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இந்நாளை நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.

இம்முறை மே 18 நினைவேந்தல் நாள், இரவு மணி 8.30-க்கு, ஜாலான் உங்கு புவான், ஜொகூர் பாருவில் (இராஜ மாரியம்மன் ஆலயம் அருகில்) நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 18 துயரத்தை நினைவுக்கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தப் பேரவலத்தை மக்களிடமும் உலக அரங்கிலும் இன்னமும் ஒலிக்க செய்யவதோடு, போர் குற்றம் புரிந்த சிங்கள இனவாதத்தின் மீது அனைத்துலகப் போர் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

மே 18 நினைவுநாள் மலேசியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஆறு கோரிக்கைகளை முன் வைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மே 18ஐ நினைவுக்கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவை :-

  1. இலங்கை அரசு மீது சர்வதேசப் போர் குற்ற விசாரணை வேண்டும்
  2. வடக்கு-கிழக்கு பகுதிகளில் இருக்கும் படையினரை மீட்டுக்கொள்ள வேண்டும்
  3. தமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்
  4. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்
  5. காணாமல் போனோரின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்
  6. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்

உச்சக் கட்டப் போருக்குப் பின்னரும் இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றம் செய்வதன் மூலம், தமிழினத்தின் வாழ்வாதார உரிமையைக் கூட சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர்களுக்கான மறுவாழ்வு மலர்ச்சியினை அது மறுக்கிறது. அவர்களுக்கான வசதிகளும் தேவைகளும் நெரிக்கப்படுகின்றன.

‘மே 18’ உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு 8

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐநாவின் தொடரும் மௌனத்தினாலும் உலக நாடுகளின் அலட்சியங்களினாலும், இலங்கையில் தமிழினத்தின் மீதிலான சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இக்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள், ஓர் இனத்தின் அழிவு என்பது உலகின் அழிவிற்கு முதல் புள்ளி என்பதை மறந்து விட வேண்டாம்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணி திரளுங்கள், சர்வதேசப் போர் குற்றத்தின் கீழ் இலங்கை விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய்யுங்கள். உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம் – மே 18-ஐ, சர்வதேச நாளாக நினைவுக்கூர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம் வாரீர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.

பகிர்ந்துகொள்ள