நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அன்பான பொது மக்களுக்கு சுகாதார திணைக்களத்தின் முக்கியமான அறிவித்தல்.
கொரோனாவின் நோய்த்தாக்கமானது உலகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. பொதுமக்களாகிய தாங்கள் அவசியமற்ற முறையில் வீட்டிற்கு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நாளாந்தம் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகச் செல்லும் பலசரக்கு கடைகளுகளிலோ, மரக்கறி, மீன் மற்றும் பாண் விற்கும் வாகனங்களை அண்மித்தோ பலர் ஒன்று கூடுவதை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டிற்கு வெளியே சென்று வந்தவுடன் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டுக் கழுவுவது தொடர்பில் மிகவும் கவனம் செலுத்துங்கள். மூக்கு, வாய் மற்றும் கண்களை கைகளால் தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருமல், தும்மல் ஏற்படும் போது மூக்கையும் வாயையும் முழங்கையின் உட்புறத்தால் அல்லது ரிசுக் கடதாசியால் மூடிக் கொள்ளுங்கள்.
எப்போதும் எந்த இடத்திலும் கட்டாயமாக இன்னொருவரில் இருந்து மூன்று அடி தூரத்திற்கு அப்பால் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது பிரதேசத்திற்கு எவராவது புதியவர்கள் வந்திருப்பதை அறிந்தால் உடனடியாக உங்களது பகுதிக்குரிய கிராம சேவை அலுவலகருக்கு அல்லது சுகாதார உத்தியோகத்தருக்கோ தெரியப்படுத்துங்கள்.
உங்களதும் உங்களது அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பு உங்களது கைகளிலேயே.
தகவல்: சுகாதார திணைக்களம்.