மோட்டார் சைக்கிள் மோதி மாற்றுத் திறனாளி மரணம்!

You are currently viewing மோட்டார் சைக்கிள் மோதி மாற்றுத் திறனாளி மரணம்!

வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். புதன்கிழமை இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து இரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்த நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் அதனை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு சிறீலங்கா காவற்துறை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply