அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு மோதலில் முடிந்துள்ளது.
இதையடுத்து, ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பை முறித்துக் கொண்டார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ஜெலென்ஸ்கி வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.
இதனால் கனிமங்கள் தொடர்பாக உடன்பாடு கையெழுத்திடப்படும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடனான போர்நிறுத்தத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை ஜெலென்ஸ்கி கேட்டபோது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
உக்ரைன் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், போரை நிறுத்தாவிட்டால், இராணுவ உதவிகளை நிறுத்துவேன் என்றும், அப்படி நிறுத்தினால் 2 வாரங்களுக்குக் கூட உக்ரைன் தாக்குப் பிடிக்கமுடியாது என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
பின்னர் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குறுக்கிட்டு, ஜெலன்ஸ்கியை, அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதுடன் நன்றியுணர்வு இல்லாதவர் என்றும் குற்றம்சாட்டினார்.
அதற்கு ஜெலென்ஸ்கி எதிர்ப்புத் தெரிவித்த போது, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறினார்.
மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைத்ததாகவும் அவரது நடத்தையால் மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் பகிரங்கமாக ஊடகங்களின் முன்பாக நடந்த அந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது.
உக்ரைனில் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே இருவரும் சந்தித்த போதும், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிந்து போனதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை ட்ரம்ப்பை மதிப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி, அவரிடம் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.