யாழில் டிப்பர் மோதியதில் செவ்வாய்க்கிழமை (10) கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த மாணவி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை, ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் குறித்த மாணவி மீது மோதி, டிப்பரின் பின் சில் மாணவியின் மீது ஏறியது.
இந்நிலையில் படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று(10) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் ஓமந்தைப் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.