நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று சிறீலங்கா காவற்துறையினர் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயாரிடமிருந்த கைக்குழந்தை அழுததால் தான் பார்ப்பதாக கூறிய மற்றொரு பெண் குழந்தையை வாங்குவதாக பாசங்கு செய்து தாயார் அணிந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.
இந்நிலையில் சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால சிறீலங்கா காவற்துறை பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகையும் கைப்பற்றப்பட்டது என்று சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.
மேலும் சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.