போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற நபர், போலியான சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார். அக்குபஞ்சர் வைத்தியமளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், அது பதிவு செய்யப்பட்ட வைத்திய நிலையமாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சிகிச்சை பெற்ற சிலர் மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, இந்த போலியான வைத்தியமே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தது.
ஆரம்பத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், பின்னர் நாடி வைத்தியர், கீலிங் சிகிச்சை மற்றும் தெய்வ வைத்தியராகவும் தன்னை குறிப்பிட்டுள்ளார்.
போலி வைத்திய நிலையத்தை நடத்துயது மட்டுமல்லாமல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வைத்தியம் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பி பொதுமக்களை திசைதிருப்பி வந்ததுடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான அவதூறுகளையும் பரப்பி வந்துள்ளார்.
எனவே இது தொடர்பில் உரும்பிராயில் போலி வைத்தியம் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் விழிப்புணர்வு பதிவொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டையடுத்து நேற்று(20.04.2023) அவரை கோப்பாய் பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
ஆங்கில வைத்திய முறைக்கு எதிரான போலித் தகவல்களை பரப்புவது, வைத்தியர்களுக்கு எதிரான அவதறு பரப்புவது போன்றவற்றிற்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கை செய்து பிணையில் விடுவித்துள்ளார்.