போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு பேரணியொன்று யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று (29.09.2022) மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ்.பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து பழைய பூங்கா வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்ததுள்ளது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசனுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம், யாழ்.மாவட்ட செயலாளரிடம் கையளித்த மனு ஐந்து அம்ச கோரிக்கைகளைஉள்ளடக்கியுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில்,“நாம் அறியக்கூடியது போதைப்பொருள் விநியோக வலையமைப்பு, போதைப்பொருள் விநியோகம், இளம் சமுதாயத்தைப் போதை பொருளுக்கு அடிமையாக்குதல் போன்ற சமூக அழிப்பு செயற்பாடுகள் மிகப்பெரிய அளவில் இடையூறின்றி எமது பிராந்தியத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சந்ததியினரே குறிவைக்கப் படுகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும், சிகிச்சை அளிக்கப்படும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது.
இளைஞர் யுவதிகளின் வளமான வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப் படுகிறது.
பொதுமக்களும் போதனா வைத்தியசாலை சமூகத்தினர் ஆகிய நாமும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மீதான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்து ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைகின்றோம்.
இளம் சந்ததியினரையும் நாட்டினையும் காப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்துகின்றோம்.
1. போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.
2.போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.
3. போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதலும், அவர்களைப் பாதுகாத்தலும்.
4. போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்தலும், ஊக்கப்படுத்துதலும்.
5. போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும் ஆகும்.
மேற்குறிப்பிட்ட எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தாமதிக்காது சகல தரப்பினரையும் உள்வாங்கி மிகப் பாரதூரமான போதைப்பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளியை கொண்டு வருவீர்கள் என திடமாக நம்புகின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.