கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தனியார் பஸ்ஸொன்றில் வருகைதந்து, தங்களுடைய அலைபேசிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு, தலைமறைவாகியிருக்கும் அறுவரை தேடி, பல முனைகளிலும் படையினர் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், அவர்களில் அறுவர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர் என்றார்.
வெள்ளவத்தை உணவக உரிமையாளர், அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் WP NC 8760என்ற இலக்கமுடைய பஸ்ஸில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து, உணவக உரிமையாளர் ஓட்டோவில் நல்லூர் – பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அத்தடன், பணியாளர்களும் ஓட்டோவில் வேலணை, புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது என்றார்.