யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இந்திய பிரஜைக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, யாழ். மாவட்டத்தில் மூன்று வீடுகளை சேர்ந்த மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய பிரஜையொருவர் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த 31 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகராலயம், கப்பல் ஊடாக இந்திய பிரஜைகள் சிலரை இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற போது இவரும் அங்கு சென்றுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
அங்கு சென்ற அவர் திண்டுக்கல் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இந்திய பிரஜை சென்றிருந்த யாழ். இணுவில் பகுதியின் இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஏழாலை பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
அவர்களுக்கான PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.