யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதையடுத்து, கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பது பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்
தனது முகநூலில் இதுதொடர்பாக அவர் இட்டுள்ள பதிவில்,
பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில், மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகவே, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள். ஆகவே, கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.