அம்பாறை- பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நடைபெறும் போராட்டம் மற்றும் வாகனப் பேரணியைத் தடுப்பதற்கான தடையுத்தரவை, பல்வேறு நீதிமன்றங்களும் பிறப்பித்துள்ளன. அக்கரைப்பற்று , கல்முனை, களுவாஞ்சிக்குடி, வவுனியா, யாழ்ப்பாணம் நீதிமன்றங்களால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து, திருக்கோவில், கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களின் பொலிஸார், அந்தந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி என்பனவற்றை நடத்த நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.
அதேவேளை, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த காவல்த்துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்த்துறையினர் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராஜா இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்