இலங்கையின் 77வது சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கறுப்புக்கொடி அடையாளப் போராட்டம் தொடர்பில், இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
2025 பெப்ரவரி 4ஆம் திகதியன்று, இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் மாணவர்கள் இலங்கைக் கொடியைக் கீழே இறக்கி, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியை ஏற்றினர்.
தகவல்களின்படி, பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை உட்பட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து, மானிய ஆணையகம் இப்போது விரிவான விளக்கத்தைக் கோரியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒன்பது மாணவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை ஆணையகம் பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலும் ஆவணங்களைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்கள் மீது மட்டுமல்ல, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.