யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரம் சந்திப் பகுதியில் இன்று(05.08.2023) காலை 10 மணி தொடக்கம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, “இந்த மண் எங்களின் சொந்த மண், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தொல்லியல் திணைகாகளமே வெளியேறு, பறாளாய் எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து, கீரிமலை எங்கள் சொத்து, மயிலத்த மடு எங்கள் சொத்து, வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஊர் மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், ஆலய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானையில் இன்று பி.ப. 3 மணிக்கு போராட்டமொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.